'ஆரோமலே' திரைப்படத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இசையை பயன்படுத்த தடை!
"விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை "ஆரோமலே" திரைப்படத்தில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் ஆகிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரித்த "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும், இந்த திரைப்படத்தின் பாடல்களும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு இன்றளவும் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.
அந்த திரைப்படம் இன்றும் அனைவராலும் கொண்டாட்பபட்டு வரும் நிலையில், சூப்பர் ஹிட்டாக அமைந்த "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை சமீபத்தில் வெளியான "ஆரொமலே" படத்தில் பயன்படுத்தி இருப்பதை எதிர்த்து ஆர்.எஸ். இன்ஃபோடையின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் டி. ராஜீவ், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தங்களது நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் இசையை, ஆரொமலே படத்தில் தயாரிப்பு நிறுவனமான மினி ஸ்டூடியோ பயன்படுத்தி இருப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் டி. ராஜீவ் தாக்கல் செய்த இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என். செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் கணபதி ஆஜரானார். அவர், தங்கள் நிறுவனம் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் இசையை பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு முரணானது என்பதால், அவற்றை தங்கள் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் பயன் படுத்துவதற்கு மினி ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆர். எஸ். இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி என். செந்தில் குமார், காப்புரிமை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தின் காட்சிகள், இசை ஆகியவற்றை "ஆரோமலே" திரைப் படத்தில் பயன் படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.