பத்ம விருதுகளைக் கூட மோடி அரசு தேர்தல் ஆயுதமாக மாற்றியுள்ளது - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

பத்ம விருதுகளைக் கூட மோடி அரசு தேர்தல் ஆயுதமாக மாற்றியுள்ளது - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

மோடி அரசு பத்ம விருதுகளைக்கூட தேர்தல் ஆயுதமாக மாற்றியுள்ளது என்றும், இந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் 37 சதவீதம் பேர் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மைக் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பொது வாழ்க்கை, கலை, கல்வி, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வியாபாரம், சமூக சேவை, பொறியியல், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பெறும் விழாவில் குடியரசு தலைவரின் கையால் இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய அரசு  வெளியிட்டது. அந்த பட்டியலில் 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 13 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 19 பேர் பெண்கள், 6 வெளிநாட்டினர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழத்தைப் பொருத்தவரை 2 பேருக்கு பத்ம விபூஷண், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு பத்மஸ்ரீ விருதை இருவர் பங்கிட்டு கொள்வதால் தமிழத்தில் மொத்தம் 14 பேர் பத்ம விருதுகளை பெறவுள்ளனர். பத்ம விருது பெறுகிற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இவர்களுடைய அர்ப்பணிப்பு, சேவை ஆகியவைதான் நமது சமூகத்தை வலுப்படுத்துகின்றன என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியான விருதுகளை அறிவித்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மைக் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘தேர்தலுக்கான பத்ம விருதுகள்!’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், “மோடி அரசு பத்ம விருதுகளைக்கூட தேர்தல் ஆயுதமாக மாற்றியுள்ளது என்றும் இந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் 37 சதவீதம் பேர், விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய மக்கள்தொகையில் அவர்களின் பங்கு வெறும் 18 சதவீதம் மட்டுமே என்றும், இந்த முறை தொடர்ந்து மீண்டும் மீண்டும் வருகிறது” என்றார்.

தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளின் எண்ணிக்கை குறித்தும், அவை எந்தெந்த மாநிலங்களில் எப்போது அறிவிக்கப்பட்டன என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார். அந்த விவரம் பின்வருமாறு:

வருடம் மொத்த பத்ம விருதுகள் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் தேர்தல் மாநிலங்களிலிருந்து விருது பெற்றோர் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் மக்கள்தொகை
2020 123 டெல்லி, பீகார் 11% 11%
2021 109 அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மே.வங்கம் 38% 18%
2022 118 கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உ.பிரதேசம், உத்தரகாண்ட் 37% 26%
2023 116 சண்டிகர், கர்நாடகா, ம.பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா 34% 21%
2025 129 டெல்லி, பீகார் 12% 11%
2026 125 அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மே.வங்கம் 37% 18%