காலையில் சாப்பிடா விட்டால் இவ்வளவு ஆபத்தா?
வேலைக்கு செல்பவர்கள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை, பலரும் பணி நெருக்கடியால் காலை உணவை தவிர்ப்பதுண்டு. இப்படி செய்வதால் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, மதியம் தீவிர பசி எடுக்கும். இப்படி இருப்பது பக்கவாதம் மற்றும் இதயப் பிரச்னைகளுக்கு ஒருவரை தள்ளிவிடும் என எச்சரிக்கிறார் பிரபல மருத்துவர்.
இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள மருத்துவர், “காலை உணவை நாம் தள்ளிப்போடும்போது, உடல் இன்சுலின் சுரப்பை சீராக செய்ய முடியாமலும், குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த முடியாமலும் தடுமாறும். இது நாள்படும்போது, டைப் 2 நீரிழிவு நோய், டிஸ்லிபிடெமியா (ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அசாதாரணமாக அதிகரித்தல் / குறைதல்), இதயத்திலுள்ள பெருந்தமனியின் தடிப்புத் தோல் அழற்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.”
பொதுவாக இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே குறைந்தது 10 மணி நேர இடைவெளியாவது இருக்கும். காலை உணவை தவிர்ப்பதால், இந்த நேரம் இன்னும் நீளும். இப்படி நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் கார்டிசால் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கும். இதனால் அழற்சியும் உயர் ரத்த அழுத்தமும் ஏற்படும் அபாயம் உள்ளது. இவையாவும் பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றுக்கு வழிவகை செய்யும் அபாயம் உள்ளது.
காலை சாப்பிடாமல் இருப்பவர்கள், மதியம் மோசமான உணவுகளை சாப்பிட அவர்களின் உடல் சமிக்ஞை செய்யும். மோசமான என்பது, அதிக கொழுப்பு நிறைந்த அல்லது அதிக சர்க்கரைச்சத்து நிறைந்த உணவுகளை குறிக்கும். இவையாவும் நாள்படும்போது இதய நலனை பாதிக்கும்.
உடலின் உட்கடிகாரத்தின் இயக்கத்தையும் காலை உணவை தவிர்ப்பது வழிவகுக்கும். ஏனெனில் ஒரு நாளின் முதல் உணவுதான் வளர்சிதை மாற்றங்களுக்கு அடிப்படை. அதுவே தவிர்க்கப்படும்போது, ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதுடன், இதயத்தின் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு, வயிற்றுப்பகுதியில் கொழுப்புச்சத்து சேர்வதால் உடற்பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் தொடங்கி ஸ்லீப் ஆப்னியா எனப்படும் தூக்கப்பிரச்னைகள் வரக்கூடும். இவையாவும் பக்கவாதம் போன்ற தீவிர பிரச்னைகளுக்கு ஒருவரை இட்டுச்செல்லும்.
எனவே காலை உணவை ஒருவர் எந்தச் சூழலிலும் தவிர்க்கக்கூடாது. ஏனெனில் காலை உணவுதான் இதயம் மற்றும் மூளையை பாதுகாக்கும் முக்கியமான உணவு. சாப்பிட நேரம் இல்லை என்பவர்கள் முழு தானியங்கள், பழங்கள், நட்ஸ், ஓட்ஸ், முட்டை போன்ற புரதம் என ஆரோக்கியமான ஸ்நாக்ஸாவது உட்கொண்டு வர வேண்டும்.
காலை உணவென்பது வெறும் உணவு மட்டுமல்ல. நீண்ட கால ஆரோக்கியத்துக்கான அடிப்படையே அதுதான்” என்றுள்ளார். அது சரி, இன்று காலை சாப்பிட்டீங்கதானே?