மகளிர் உரிமைத் தொகை... ஸ்டாலின் புது அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், பெண்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்த மற்றும் சாதனை படைத்த பெண்களின் வெற்றி கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக சென்னையில் `வெல்லும் தமிழ்ப் பெண்கள்' எனும் தலைப்பில் தமிழகத்தின் சாதனை பெண்களின் வெற்றி விழா நடைபெற்றது.
இதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 பேருக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கி பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது.
இதன் மூலம் சத்தான உணவு, குழந்தைகளுக்கான கல்விக்குச் செலவு என வாழ்க்கைத்தரம் உயரவும், மறைமுகமாகவும் இது உதவிக்கொண்டு இருக்கிறது. மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்தியவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
இந்த விழாவில் பெண்கள், தொழில் முனைவோர், தோழி விடுதி பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் மட்டுமே உள்ள நாதாஸ்வர குழுவின் வாத்திய நிகழ்ச்சி, பெண் பட்டதாரிகள் கொண்ட இசைநிகழ்ச்சி ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், வனத்துறை, மருத்துவமனை என பல துறைகளில் நிர்வாக பொறுப்பில் உள்ள பெண் ஆளுமைகள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், இஸ்ரோ திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., தலைமை செயலாளர் முருகானந்தம், நடிகர் சத்யராஜ், நடிகைகள் ரோகிணி, தேவயானி, சினிமா இயக்குநர்கள் ராஜு முருகன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.