ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு - கொன்ஸ்டாஸ் நீக்கம், அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. அதன்பின் இரண்டாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு மூன்றாவது போட்டி டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டிலும், நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னிலும், கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி சிட்னியிலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், சோயப் பஷீர் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களைத் தவிர, வில் ஜேக்ஸ், மேத்யூ பாட்ஸ் ஆகியோருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் டக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
அதேசமயம் பாட் கம்மின்ஸ், சாம் கொன்ஸ்டாஸ் ஆகியோருக்கு பதிலாக ஜேக் வெதர்லெட், பிரெண்டன் டாகெட் ஆகியொருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருந்த மார்னஸ் லபுஷாக்னே, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இதுதவிர ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன், நாதன் லையன், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி (முதல் டெஸ்ட்): ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதர்லட், பியூ வெப்ஸ்டர்
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்கு, மார்க் வுட்