'ஜனநாயகன்' படத்திற்கு புக்கிங் தாமதம் ஏன்? அரசியல் காரணமா? - திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது.
தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் வெளியீட்டில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்நிலையில், "ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, ஜனநாயகன் படத்திற்கு புக்கிங் தாமதமாவது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில், "பராசக்தியை விட ஜனநாயகன் படத்துக்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்கள் வசூலில் 75 முதல் 80% வரை கேட்கிறார்கள். நாங்கள் 70% வரை தர தயாராகவே உள்ளோம். இந்த இழுபறியால் தான் ஜனநாயகன் புக்கிங்கிற்கு தாமதமாகிறது. இதற்கு வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை. எந்தவித அழுத்தமும் எங்களுக்கு இல்லை. விஜய்யிடம் இதை பற்றி பேசியிருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.