உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் சஸ்பெண்ட்

உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசா​ரணைக்​காக நேற்று கூடியது. அப்​போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாயை நோக்கி வீசி உள்​ளார்.

ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் போலீ​ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

இந்த சம்​பவத்​தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது. விசா​ரணை தடைபட்​டது. இதனிடையே, ‘‘சனாதன தர்​மத்தை அவம​திப்​பதை சகித்​துக் கொள்ள முடி​யாது’’ என கிஷோர் கோஷமிட்​ட​தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் கூறும்​போது, “இத​னால் கவனத்தை சிதற விடாதீர்​கள். இவை என்னை பாதிக்​க​வில்​லை’’ என்​றார்.

உச்ச நீதி​மன்​றத்​தில் ராகேஷ் தலால் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மத்​திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயி​லில் சேதமடைந்த நிலை​யில் உள்ள விஷ்ணு சிலையை மறுநிர்​மாணம் செய்ய உத்​தர​விட வேண்​டும்’’ என கோரி​யிருந்​தார். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்​வில் கடந்த மாதம் விசா​ரணைக்கு வந்​ததது. அப்​போது, தலைமை நீதிபதி கூறும்​போது, “சிலை மறுநிர்​மாணம் பற்றி அந்த தெய்​வத்​திடமே கேளுங்​கள்’’ எனக் கூறி மனுவை தள்​ளு​படி செய்​தார்.

பிரதமர் மோடி கண்டனம்: பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது நடந்த தாக்குதல் இந்தியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது’’ என பதிவிட்டுள்ளார்.