மம்மூட்டி சம்பள விவகாரம்: தனுஷ் படத்தயாரிப்பில் மாற்றம்
தனுஷின் அடுத்த படத்தின் தயாரிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விக்னேஷ் ராஜா படத்தினை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். இப்படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படப்பூஜையும் முடித்து, அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவரோ பெரிய சம்பளம் கேட்டிருக்கிறார். இதன் தயாரிப்பு செலவு, சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு பார்த்தால் பெரிய பட்ஜெட் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இதன் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம்.
அதனைத் தொடர்ந்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்க ஆலோசனையில் ஈடுபட்டது. ராஜ்குமார் பெரியசாமியின் முந்தைய படமான ‘அமரன்’ படத்தினை தயாரித்த ராஜ்கமல் நிறுவனமும் தற்போது இப்படத்தினை தயாரிக்க பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது.
இன்னும் படப்பிடிப்பே தொடங்கப்படாத இதன் ஓடிடி உரிமையினை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். ஓடிடி உரிமை விற்கப்பட்டுவிட்டதால், இதன் படப்பிடிப்பினை சீக்கிரம் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு படக்குழு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தயாரிப்பு நிறுவனம் முடிவானவுடன், படப்பிடிப்பை தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.