ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு அதிர்ச்சி தோல்வி
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஆந்திரா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025-26 ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது.
இதில் அதிகபட்சமாக வித்யூத் 40 ரன்களையும், சந்தீப் வாரியர் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 182 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆந்திரா அணி தரப்பில் பிரித்வி ராஜ் 4 விக்கெட்டுகளையும், சௌரப் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆந்திரா அணியும் ஆரம்பம் முதலே தமிழக அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது. இருப்பினும் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷேக் ரஷீத் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தடுடன், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களைச் சேர்த்திருந்தார். அவரைத் தவிர்த்து சௌரப் குமார் 30 ரன்களை எடுத்திருந்தார்.
இதனால் ஆந்திரா அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும், சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 5 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழக அணிக்கு மீண்டும் எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை.
இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக பி சச்சின் அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களையும், ஆண்ட்ரே சித்தார்த் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதன் காரணமாக தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆந்திரா அணி தரப்பில் சௌரப் குமார் 4 விக்கெட்டுகளையும், பிரித்வி ராஜ், திருபுரன ஆகியோர் தல இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆந்திரா அணியில் ஸ்ரீகர் பரத் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் இணைந்த அபிஷேக் ரெட்டி - கிரந்த் கரண் ஷிண்டே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களையும் கடந்தனர்.
பின்னர் 70 ரன்களில் அபிஷேக் ரெட்டியும், 51 ரன்களில் கிரந்த் கரணும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஷ்வின் ஹெப்பர் 21 ரன்களையும், சத்யநாராயண ராஜு 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தனர். இதன் மூலம் ஆந்திரா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் வெற்றிக்கு காரணமாக அமைந்த அபிஷேக் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆந்திராவுக்கு எதிரான தோல்வியின் மூலம் தமிழ்நாடு அணி நடப்பு சீசனில் இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளந்து. முன்னதாக தமிழ்நாடு அணி ஜார்கண்டிற்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்திதது. அதனைத் தொடர்ந்து நாகாலாந்து, விதர்பா அணிகளுடான போட்டியை டிரா செய்த நிலையில், தற்சமயம் ஆந்திராவுக்கு எதிராக மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது.