5வது போட்டியில் வெற்றி... டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

5வது போட்டியில் வெற்றி... டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20 போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

அகமதாபாத்தில் இன்று இந்தியா, தெ.ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அபிசேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 2 பேரும் தெ.ஆப்பிரிக்க பந்துவீச்சை நொறுக்கினர்.

சிறப்பாக விளையாடிய அபிசேக் சர்மா 34, சஞ்சு சாம்சன் 37 ரன்களில் அவுட்டாகினர். அதன்பிறகு திலக் வர்மா களமிறங்கினார். அவர் வழக்கம் போல அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. மறுமுனையில் சூரியகுமார் 5 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பிறகு வந்த ஹர்திக் பாண்டியா பட்டாசாய் வெடித்தார்.

16 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்திக் பாண்டியா, 2வது அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்தார். அவரும் 63 ரன்களில் அவுட்டானார். இதேபோல் அரைசதமடித்து விளையாடிக் கொண்டிருந்த திலக் வர்மா 73 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

Tilak Varma reached his fifty in 30 balls, India vs South Africa, 5th T20I, Ahmedabad, December 19, 2025

முடிவில் 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்களை எடுத்தது. சிவம் துபே 10 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இதன்பின்னர் 232 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி ஹாக் ஆரம்பத்தில் இருந்தே வெறி பிடித்தவர் போல விளையாடினார். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் அதிகரித்தது.

Quinton de Kock gave South Africa a blazing start in the powerplay, India vs South Africa, 5th T20I, Ahmedabad, December 19, 2025

அபார ஆடிக் கொண்டிருந்த டி ஹாக் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனவே தென்னாப்பிரிக்க அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 5வது போட்டியில் வென்று, 3-1 என்ற புள்ளிக் கணக்கில் டி20 போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.