ரோஜர் ஃபெடரரின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த நோவாக் ஜோகோவிச்!

ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய மிகவும் வயதான வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை தற்சமயம் நோவாக் ஜோகோவிச் முறியடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகின் 5ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை எதிர்த்து, ஸ்பெயினின் ஜாம் முனார் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
காலிறுதியில் ஜோகோவிச்
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் ஜாம் முனார் 7-5 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி, ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மூன்றாவது செட்டை யார் கைப்பற்றி, ஆட்டத்தில் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொன்டது. பின்னர் மூன்றாவது செட்டியில் அபாரமாக விளையாடிய ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் ஆட்ட முடிவில் நோவாக் ஜோகோவிச் 6-3, 5-7, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஜாம் முனாரை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், நடப்பு சாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளார். இதனையடுத்து நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ஜிஸோ பெர்க்ஸை எதிர்த்து நோவாக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
ஃபெடரர் சாதனை முறியடிப்பு
இந்த நிலையில், நடப்பு ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நோவாக் ஜோகோவிச் முன்னேறியதன் மூலம், முன்னாள் ஜாம்பவான் ரோடர் ஃபெடரரின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி, ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய மிகவும் வயதான வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை தற்சமயம் நோவாக் ஜோகோவிச் முறியடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, ரோஜர் ஃபெடரர் 38 வயது 2 மாதங்கள் இருந்த போது 2019ஆம் ஆண்டு ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், தற்சமயம் நோவாக் ஜோகோவிச் 38 வயது 4 மாதங்களில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலின் அடுத்தடுத்த இடங்களையும் இவர்கள் இருவரே பிடித்துள்ளனர்.