இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: கிரீன் விலகியதால் ஆஸி.,க்கு பின்னடைவு!

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: கிரீன் விலகியதால் ஆஸி.,க்கு பின்னடைவு!

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேமரான் கிரீனுக்கு பதிலாக, மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருடன் நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால், ஹர்ஷத் ராணா, துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் டிராவிஸ் ஹெட், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் என பலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மார்கஸ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நல்ல பார்மில் உள்ள லபுஷேன் குயின்ஸ்லாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் நான்கு சதங்கள் அடித்துள்ளார். உள்ளூர் தொடர் முடிந்த பிறகு, இந்தியாவிற்கு எதிரான விளையாடும் ஆஸ்திரேலியா அணியில் இணைந்து விளையாடுகிறார்.

கேமரூன் கிரீன் சமீபத்திய உள்ளூர் தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக மேற்கு ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அப்போட்டியில் அவருக்கு வழங்கப்பட்ட எட்டு ஓவர்களில் நான்கு ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். கேமரூன் கிரீனுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரீனுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சிறிது காலம் தேவைப்படும் எனவும், அதன் பிறகு ஆஷஸ் தொடருக்கு தயாராக உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு மூன்றாவது சுற்றில் விளையாடுவார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடர் இன்னும் ஐந்து வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், கிரீன் காயமடைந்திருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேப்டன் கம்மின்ஸ், பவுலர் அபோட், பிரண்டன் டாகேட் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலியா அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொன்னொலி, பென் துவார்ஷுஸ், நாதன் எல்லீஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குன்னேமன், மார்னஸ் லபுஷேன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிபே, மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்