SIR பணிகள்... மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய உத்தரவு

SIR பணிகள்... மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய உத்தரவு
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வரும் நிலையில் அதனை டிசம்பர் 4ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அமுதாவுக்கு தலைமைச்செயலர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் போதிய அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என்றும், பருவமழையால் பாதிக்கப்படாத வகையில் பணிகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். பிழை இல்லாதவாறு தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், திருநங்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.