இப்போதுவரை எனக்கு இசை தெரியாது: இளையராஜா
அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடந்து வருகிறது. பிப் 4-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான பத்மபாணி விருது நேற்று வழங்கப்பட்டது.
விருதுபெற்ற பின் பேசிய இளையராஜா, “இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு எனது 1,541-வது படத்தின் பின்னணி இசையை முடித்துவிட்டு வந்தேன். என்னிடம் பலர் எப்படி பாடல்களை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அவர்களிடம், இப்போதுவரை எனக்கு இசை தெரியாது என்று சொல்கிறேன்.
அதனால்தான் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இசை பற்றி எல்லாம் தெரிந்திருந்தால், நான் அதில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என நினைத்து வீட்டிலேயே இருந்திருப்பேன். நான் என்னை வாழ்நாள் முழுவதும் இசை மாணவனாகக் கருதுகிறேன். நான் நவீன தொழில் நுட்பங்களை நம்பியிருக்கவில்லை” என்று தெரிவித்தார்.