முழு படமும் பார்க்காமல் கருத்து சொல்வதா? - ‘ஹாட்ஸ்பாட் 2’ இயக்குநர் வருத்தம்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி, பிரிகிடா சகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஹாட் ஸ்பாட் 2’.
ஜன. 23-ல் வெளியான இப்படம் வரவேற்பு பெற்றதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசும்போது, “ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது.
ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ, அதைவிட 2 மடங்கு வெளியான 4 நாளில் இப்படம் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இது வெற்றிதான். படத்தில், தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாக இணையத்தில் ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.
ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் பிடிக்கவில்லை என்பதும் படத்தைப் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. அதை மதிக்கிறோம். ஆனால் பெண்ணியவாதிகள் சிலர், தங்களின் கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாகப் பார்க்காமல், இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்த்துவிட்டு சில போலி பெண்ணியவாதிகள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்” என்றார்.