எங்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லை - ஆர்.எம்.வீரப்பன் மகன் பேட்டி

எங்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லை - ஆர்.எம்.வீரப்பன் மகன் பேட்டி

’ஆர்.எம்.வி. கிங் மேக்கர்’ ஆவணப்பட அறிமுக விழாவில், தற்போதைய காலகட்டத்தில் நல்லவர்களுக்கு அரசியலில் வேலையில்லை என்று ஆர்.எம்.வீரப்பன் மகன் தங்கராஜ் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், வைரமுத்து, சைதை துரைசாமி, செ.கு. தமிழரசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 36 பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து ’ஆர்.எம்.வி கிங் மேக்கர்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

அந்த ஆவணப் படத்தில் ஆர்.எம்.வீரப்பன் குறித்து ரஜினிகாந்த் பேசியது பேசு பொருளானது. ”பாட்ஷா திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம். வீரப்பன், அப்போது அதிமுக அமைச்சராக இருந்தார். இந்நிலையில் பாட்ஷா படத்தின் வெற்றி விழா மேடையிலேயே ஆர்.எம்.வீரப்பனை அருகில் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் இருக்கிறது என நான் பேசினேன். அதற்கு அடுத்த நாளே ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசியல் புரிதல் இல்லாமல் அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.

அந்த நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நான் ஆர்.எம்.வீரப்பனிடம் தொலைபேசியில் பேசினேன். இருப்பினும் அவரோ அந்த ஒரு சம்பவமே நடக்காதது போல இயல்பாக பேசினார். அப்போது நான் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசட்டுமா? என கேட்டேன். அதற்கு அவர் மறுத்ததோடு, ஜெயலலிதா இந்த விவகாரத்தை வேறு மாதிரி புரிந்து கொள்வார் என தெரிவித்தார். அந்த சம்பவம் எனக்கு பல நாள் நெருடலாகவே இருந்தது” என்று அந்த ஆவணப் படத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

இந்நிலையில் ஆவணப்படத்தின் அறிமுக நிகழ்வுக்குப் பின்னர் ஆர்.எம்.வீரப்பன் மகன் தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”இந்த ஆவணப்படத்தில் பல்வேறு விதமான தகவல்கள் சற்று மாற்றம் கொண்டதாக இருக்கலாம். ஏனெனில் இதில் பேசியிருக்கக் கூடிய பிரபலங்களுக்கு நாங்கள் எதுவும் எழுதிக் கொடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதையே பேசியுள்ளனர். 2026-ல் ஓடிடி அல்லது வெப் சீரியஸாக வெளியிடலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

இந்த ஆவணப்படத்தில் ஆர்.எம். வீரப்பனின் மருமகன் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் பற்றி பெரிதாக யாரும் கூறவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, ”சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் ஆர்.எம்.வீரப்பனுடைய மருமகன். நான் மகன், நானே வாரிசு” என தங்கராஜ் கண்ணீர் மல்க பேசினார்.

பின்னர் மிகப் பெரிய அரசியல் பின்புலம் கொண்ட உங்கள் குடும்பத்தில் இருந்து யாருமே ஏன் அரசியலுக்கு வரவில்லை? என்ன காரணம்? என செய்தியாளர்கள் கேட்ட போது, ”வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், தற்போதைய சூழலில், நல்லவர்களுக்கு அரசியலில் வேலை இல்லை என்று நான் கருதுகிறேன். எங்களுக்கு அதில் ஆர்வம் கிடையாது. படிப்பு மற்றும் தொழிலில் எங்களுடைய முனைப்பு இருக்கிறது” என்று ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ் பதில் அளித்தார்.