மன உளைச்சலில் பினாயிலை குடித்த பெண்: ஆயுதப்படை காவலர் மீது புகார்

மன உளைச்சலில் பினாயிலை குடித்த பெண்: ஆயுதப்படை காவலர் மீது புகார்

வரதட்சணை கொடுமைப்படுத்தி, 1 1/2 வயது மகனை பார்க்க விடாததால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விபரீத முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியை சேர்ந்த கௌசல்யாவின் மகள் ஆதிரா (21). இவருக்கும் சின்னமனூரை சேர்ந்த பள்ளி ஆசிரியர்களான திருப்பதி - மகேஸ்வரி ஆகியோரின் மகன் கிருஷ்ணா சிங் (34) என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ஆதிராவுக்கு அவரது வீட்டில் 40 பவுன் நகை போட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஒன்றை வயதில் குழந்தை உள்ளது.

கிருஷ்ணா சிங் சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருவதால் திருமணம் முடிந்து சில மாதங்களில் அவர் சென்னைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து சில மாதங்களில், ஆதிராவும் சென்னைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், ஆதிராவை அவரது கணவர் கிருஷ்ணா சிங் குடித்து விட்டு மது போதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணா சிங் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை துன்புறுத்தியதாகவும், வீட்டில் இருந்து மேலும் நகைகளை பெற்று வர வேண்டும் என மாமனார் மற்றும் மாமியாருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஆதிரா புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போடி மகளிர் காவல் நிலையத்தில் ஆதிரா தனது கணவர் கிருஷ்ணா சிங், மாமானர் திருப்பதி, மாமியார் மகேஸ்வரி ஆகியோர் மீது வரதட்சணை புகார் கொடுத்து இருந்தார். இதன் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் 1 1/2 வயது மகனை கொடுக்காமல் அடித்து துன்புறுத்துவதாகவும், இது குறித்து கேட்கச் சென்ற போது அவதூறாக பேசி ஆதிராவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையில் பணி புரிவதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என கிருஷ்ணா சிங் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஆதிரா பினாயிலை குடித்து விபரீத முயற்சி செய்துள்ளார். பின்னர், அவரின் குடும்பத்தார் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.

இது குறித்து ஆதிராவின் தாயார் கௌசல்யா கூறுகையில், "தன் மகளை இந்த விபரீத முடிவுக்கு தூண்டிய அவரது கணவர், மாமனார், மாமியார் மீது உரிய நடவடிக்க எடுக்க வேண்டும். எங்களது பேரனை மீட்டு தர வேண்டும். திருமணத்திற்கு போட்ட நகைகளையும் மீட்டு தர வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.