ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.25,000 பறிமுதல்
ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத ரூ.25,850 மற்றும் 3 கிராம் தங்க நாணயங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 2026 புத்தாண்டை முன்னிட்டு பலரிடமிருந்து பரிசுப் பொருட்கள் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார், ஆய்வுக் குழுவினரின் உதவியுடன் இரவு 8 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் உள்ள பல்வேறு அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.25,850, 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 சட்டைகள் மற்றும் பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அலுவலக அறையில் பணம் மற்றும் நகைகள் இருந்ததையடுத்து, அவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணக்கில் வராத பணம் மற்றும் தங்க நாணயங்கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் சரண்யா தேவியிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.