காணும் பொங்கல் விளையாட்டு போட்டி: மனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய கணவர்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் மனைவியை கணவர் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கடந்த இரண்டு தினங்களாக பொங்கல் பண்டிகையானது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிராமங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிறுவர், சிறுமிகள், இளைஞர், இளம்பெண்கள், திருமணமான ஆண்கள், பெண்கள், முதியோர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கணவர்கள் தங்களது மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் யார் முதலில் வருவார்களோ அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என விழா குழுவினர் அறிவித்தனர். இதனால் உற்சாகமடைந்த கணவர்கள் தங்களது மனைவிகளை தூக்கிக் கொண்டு ஓடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.