உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி முதல் பரிசை பெற்றார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முதல்நாளில் அவனியாபுரத்திலும், இரண்டாம் நாளில் பாலமேட்டிலும், மூன்றாம் நாளில் அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் அவனியாபுரத்தில் (ஜன 15) நடைபெற்ற போட்டியில், வலையன்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் முதலிடத்தையும், அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

அதேபோல்,  பாலமேட்டில் நடந்த போட்டியில் பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித் மற்றும் பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் இருவரும் தலா 16 காளைகளை அடக்கி சமநிலையில் இருந்த நிலையில், குலுக்கல் முறையில் அஜித் முதலிடம் பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்க, அலங்காநல்லூரின் முக்கிய கோயில்களைச் சேர்ந்த காளைகள் வாடிவாசலில் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் நூற்றுக்கணக்கான மாடுகள் அவிழ்க்கப்பட்டன.

11 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 19 காளைகளை அடக்கி கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார். அவருக்கு முதலமைச்சர் சார்பில் 8 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கார் பரிசாக வழங்கப்பட்டது. நட்சத்திர மாடுபிடி வீரரான பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 16 காளைகளை அடக்கி, 2ஆம் பரிசாக இருசக்கர வாகனத்தை பெற்றார். மூன்றாம் பரிசு 11 காளைகளை அடக்கிய பாசிங்காபுரத்தை சேர்ந்த ஸ்ரீதருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர் புதுக்கோட்டை ஏவிம் பாலாவின் காளைக்கு கிடைத்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் காளைக்கு இரண்டாம் பரிசாக மோட்டார் பைக்கும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் காளைக்கு மூன்றாம் பரிசாக எலெக்ட்ரிக் பைக்கும் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வருகை புரிந்திருந்தார். அப்போது சிறப்பாக மாடுபிடித்த வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை முறையாக பராமரிக்க ரூ. 2 கோடி செலவில் சிறப்பு வாய்ந்த உயர்தர மருத்துவமனை அலங்காநல்லூரில் நிறுவப்படும் என்றும், அதிக காளைகளை அடக்கி சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசு பணி வழங்க வழிவகை செய்யப்படும் என்றும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.