போலி ஆவணங்கள் மூலம் இழப்பீடு பெற்று மோசடி! ரூ.18.10 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை!
நில ஆவணங்களை போலியாகத் தயாரித்து இழப்பீடு பெற்ற வழக்கில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை, ரூ.18.10 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்.எச்.ஏ.ஐ (NHAI) மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் சிப்காட் (SIPCOT) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்துதலில், நில ஆவணங்களை போலியாக தயாரித்தல் மற்றும் தவறான இழப்பீடு வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது சம்பந்தமாக நவம்பர் 19 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், 18.10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத் துறை சென்னை மண்டல அலுவலகம், நிலம் கையகப்படுத்தும் செயல்பாடுகளில் போலி ஆவணங்கள் மூலம் இழப்பீடு பெற்ற பெரிய அளவிலான மோசடி தொடர்பாக, பண மோசடி தடுப்பு சட்டம் (PMLA), 2002-இன் கீழ் நவம்பர் 19 அன்று சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது.
2021, 2022-ஆம் ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் காவல் நிலையங்களில், 1991-இல் விஜிபி குழும நிறுவனங்கள் சாலை, பூங்கா போன்ற பொதுப் பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கிய நிலங்கள், பின்னர் போலி ஆவணங்கள் மூலம் ரத்து செய்யப்பட்டு தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 19ஆம் தேதி 19 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.1.56 கோடி ரொக்கம், 74 லட்சம் மதிப்பிலான நகை, ரூ.8.4 கோடி வைத்திருந்த வங்கிக் கணக்குகள் முடக்கம், ரூ.7.4 கோடி மதிப்பிலான பங்குகள் என மொத்தம் ரூ.18.10 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடியில் முக்கிய நபர்கள் மற்றும் சில அரசு ஊழியர்கள் இணைந்து செயல்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் அமலாக்கத்துறை, சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்த பின், அடுத்தகட்ட விசாரணை தொடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனை செய்த முக்கிய இடங்கள்
முன்னதாக, சௌகார்பேட்டை பகுதியில் பவர்லால் முத்தா என்ற தொழிலதிபர் வீட்டிலும், கோடம்பாக்கத்தில் சுகாலி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் கீழ்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் நிர்மல் குமார் என்ற மொத்த இரும்பு வியாபாரி வீட்டிலும் அதிரடியாக சோதனை செய்தனர்.
மேலும், கே.கே.நகர் பகுதியில் தங்கம் மொத்த வியாபாரம் செய்யக்கூடிய தொழிலதிபரின் இரண்டு வீடுகளிலும் சோதனை நடத்தினர். அதேபோல் அம்பத்தூர் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் இல்லத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.