ஆஸ்கரில் பெண் இயக்குநர்களின் படங்கள் புறக்கணிப்பு

ஆஸ்கரில் பெண் இயக்குநர்களின் படங்கள் புறக்கணிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்​மேன். பல படங்​களில் நடித்​திருக்​கும் இவர், சில படங்​களைத் தயாரித்​துள்​ளார். ‘ஏ டேல் ஆஃப் லவ் அண்ட் டார்க்​னஸ்’ உள்பட சில படங்​களை இயக்கியுள்ள இவர், இப்​போது ‘த கேலரிஸ்ட்’ என்ற படத்​தைத் தயாரித்து நடித்துள்​ளார்.

இப்​படம் அமெரிக்​கா​வில் நடை​பெற்ற சன்​டான்ஸ் திரைப்பட விழாவில் திரை​யிடப்பட்​டது. அப்​போது செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ஆஸ்​கரில் பெண்​ இயக்​குநர்​களின் படங்​கள் புறக்கணிக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

ஆஸ்​கர் விருது வழங்​கும் விழா மார்ச் 15-ம் தேதி நடை​பெற இருக்கிறது. இதில் இடம்​பெற்ற திரைப்​படங்​களின் இறு​திப் ​பட்டியல் சமீபத்​தில் வெளி​யிடப்​பட்​டது. இந்​நிலை​யில் நடாலி போர்ட்​ மேன் அளித்​துள்ள பேட்​டியில், “இந்த ஆண்டு நான் பார்த்த சிறந்த படங்​களில் பல, பெண்​கள் இயக்​கிய​வை.

‘ஸாரி பேபி’, ‘லெஃப்ட்​-ஹேண்​டட் கேர்ள்’, ‘ஹெ​டா’, ‘தி டெஸ்​டமென்ட் ஆஃப் ஆன் லீ’ ஆகிய படங்​கள் இந்​தாண்டு பலரால் விரும்பப்​பட்​டப் படங்​கள். ஆனால் அவற்​றுக்​குத் தகு​தி​யான பாராட்டு​கள் கிடைக்​க​வில்​லை. விருதுகள் வழங்கி அங்கீகரிக்காததால் அப்​படங்​கள் ஒவ்​வொரு மட்​டத்​தி​லும் தடைகளை எதிர்கொள்​கின்​றன” என்று தெரி​வித்​துள்​ளார்.

குளோயி ஜாவோ என்ற பெண் இயக்​குநர் இயக்​கி​யுள்ள ‘ஹாம்​நெட்’ ஆஸ்கரில் 8 பரிந்​துரைகளை பெற்​றிருந்​தா​லும் பெண்​கள் இயக்​கிய மற்ற சில சிறந்த படங்​கள் இடம்​பெறாதது ஹாலிவுட் திரையுலகினரை​யும் சினிமா ஆர்​வலர்​களை​யும் ஆச்​சரி​யத்​தில்​ ஆழ்த்​தி இரு​க்​கிறது.