“என் படங்கள் போதையை ஊக்குவிக்கிறதா?” - லோகேஷ் கனகராஜ் விளக்கம்
தன் படங்கள் போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பதாக சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இது குறித்து கூறியதாவது: “என் படங்கள் மீது நீண்ட நாட்களாகவே இந்த குற்றச்சாட்டை வைக்கின்றனர். என்னுடைய படங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், போதைப் பொருட்களை பயன்படுத்தினால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நான் எங்குமே சொல்லி இருக்கமாட்டேன். கமர்ஷியல் படங்களே செய்தாலும் எனக்கென்று ஒரு சமூக அக்கறை உள்ளது. அதை மீறி நான் எதுவும் செய்ததில்லை.
என்னுடைய ‘மாநகரம்’ படம் தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ வரை எனக்கு கிடைத்த ஹீரோக்கள் மூலமாக போதைப் பொருட்களுக்கு எதிராக பேச முடியுமோ அதை உரக்க பேசுகிறேன்.
எவ்வளவு தூரம் போதைக்கு எதிரான விழிப்புணர்வுகளுக்கு நான் ஆதரவு அளித்திருக்கிறேன் என்று எனக்குதான் தெரியும். என் சார்பாக அவ்வளவு பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கல்லூரி கல்லூரியாக சென்று இதை ஒரு பிரச்சாரமாகவே செய்து கொண்டிருக்கிறேன். 15 ஆயிரம் மாணவர்களை போதைப் பொருட்களை தொடமாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறேன்.