இந்திய ஒரு நாள் அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா ரிஷப் பந்த்?
நியூசிலாந்து ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் தொடர் ஜனவரி 11 ஆம் தேதி முதலும், டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 20 ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளன.
இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் மிட்செல் சான்ட்னருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டதால், நியூசிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்திய ஒருநாள் அணி ஜனவரி 2 அல்லது 3ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இதில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடிப்பார்களா? விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களுக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இச்சூழலில் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ரிஷப் பந்த் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க தவறி வருவதுடன், தனது ஆட்ட அணுகுமுறையை மாற்றாமல் இருந்து வருவது அணி தேர்வு குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்க தேர்வு குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏனெனில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக வழி நடத்திய இஷான் கிஷன் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இது தவிர, நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 33 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். குறிப்பாக மிடில் ஆர்டரில் அவர் அதனை செய்திருந்தார்.
இதன் காரணமாக தற்போது இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்க தேர்வு குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்திய அணிக்காக 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் ஒரு சதம், 7 அரைசதங்களுடன் 933 ரன்களைச் சேர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இரட்டை சதமடித்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.