இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் பிக்கிள்பால் தொடர்; சென்னையில் வீரர்கள் அறிமுகம்!

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் பிக்கிள்பால் தொடர்; சென்னையில் வீரர்கள் அறிமுகம்!

 இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள பிக்கிள்பால் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தியாவில் சமீபகாலமாக பிக்கிள்பால் விளையாட்டு பிரபலமாக வளர்ந்து வரக்கூடிய ஒன்றாக உள்ளது. டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் கலவையாக உள்ள பிக்கிள்பால் விளையாட்டை மேலும் மெருகூட்டும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக "இந்தியன் பிக்கிள்பால் லீக்" தொடர் விரைவில் துவங்க உள்ளது.

பங்கேற்கும் அணிகள்

வரும் டிசம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை சூப்பர் வாரியர்ஸ் (Chennai Super Warriors), பெங்களுரு பிலாஸ்டர்ஸ் (Bengaluru blasters), குருகிராம் கேப்பிட்டல் வாரியர்ஸ் (Gurgaon Capital Warriors), ஹைதராபாத் ராயல்ஸ் (Hyderabad Royals), மும்பை ஸ்மாஷர்ஸ் (Mumbai Smashes) ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் இத்தொடரில் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜெர்சி அறிமுகம்

இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தொடரில் பங்கேற்கும் அணிகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிமுக நிகழ்ச்சியில் பிக்கிள்பால் விளையாட்டு வீரர்கள் மற்றும் லீகில் பங்கேற்க உள்ள அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு அணிகளின் பிரத்யேக ஜெர்ஸியை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு அரசு நவீன விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனை மேம்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதன் மூலம் இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்தது. சென்னை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பிக்கிள்பால் விளையாட்டுக்கான பயிற்சியாளர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நியமிக்க உள்ளது" என்றார்.

இந்தியாவின் முன்னணி பிக்கிள்பால் வீராங்கனைகளில் ஒருவரான மிஹிகா யாதவ் கூறும்போது, "முதன்முறையாக நடைபெறும் இந்தியன் பிக்கிள்பால் லீக் தொடரில் பங்கேற்பது மிகவும் வியப்பாக உள்ளது. உலக அளவில் பிக்கிள்பால் விளையாட்டு வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்ட ஒரு அரிய வாய்ப்பாக இந்த லீக் தொடர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பிக்கிள்பால் விளையாட்டு வளர்ந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அத்துல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பிக்கிள் பால் போட்டியை இரண்டு பேர் அல்லது நான்கு பேர் விளையாடலாம். குறுகிய இடத்தில் இந்த போட்டியை விளையாட முடியும் என்பதால், இப்போட்டிகள் பிரபலம் அடைந்து வருகின்றன. ரவுண்டு ராபின் முறை மற்றும் நாக் அவுட் முறைப்படி இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பிக்கிள் பால் லீக் முதன்முறையாக இந்த ஆண்டு இந்தியாவில் ஆரம்பமாகிறது என்பதும், இந்த விளையாட்டினை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அங்கீகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.