டிட்வா புயலால் தஞ்சையில் 48 ஆடுகள் உயிரிழப்பு; விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
புயல் காரணமாக பெய்த கனமழையால் 48 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இறப்பிற்கான காரணம் குறித்து கால்நடை மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர்.
டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழையால் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக குருங்குளம் பகுதியில் அதிகபட்சமாக 124.50 மில்லி மீட்டரும், நெய்வாசல் தென்பாதி பகுதியில் 109.20 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
விளைநிலங்கள் பாதிப்பு
இந்த கனமழையால் நெய்வாசல் குலமங்கலம் பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நடவு நட்டு ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வல்லம் வடிகால் வாரியிலும் நீர் நிரம்பியபடி செல்வதால், அந்த நீரும் வயலுக்குள் சென்று மேலும் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கும்பகோணத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார், 3 பேர் படுகாயமடைந்தனர். அங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
48 ஆடுகள் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழ கக்கரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இயேசு. இவர் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 20 மாடுகளை வளர்த்து வருகிறார். அங்கு பெய்த கனமழை காரணமாக அவருடைய மந்தையில் 48 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் ஆடுகள் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய அவற்றிற்கு உடற்கூராய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த 48 ஆடுகளின் மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சாய்ந்த தென்னை மரங்கள்
தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நீலமேக பெருமாள் ஆலயத்தைச் சுற்றி ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. டிட்வா புயல் காரணமாக ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்து எந்த நேரத்திலும் விழும் என்ற நிலையில் இருக்கவே, இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் செந்தமிழ்ச்செல்வன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றுவதற்காக மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும் சாலையில் செல்லும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பேரிகார்டு அமைத்து போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தீயணைப்புத் துறையினர் எந்திரம் மூலம் மரத்தை அறுத்து கீழே சாய்த்தனர். மரம் கீழே விழுந்ததும், அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடிச்சென்று தேங்காய் மற்றும் இளநீரை எடுத்துச் சென்றனர்.