அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி! இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஜெர்மனி, ஸ்பெயின் அசத்தல்!

அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி! இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஜெர்மனி, ஸ்பெயின் அசத்தல்!

ஜெர்மனி அணிக்கு எதிரான இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளது.

ஆடவர் இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரானது சென்னை மற்றும் மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் முன்னேறின. இதனையடுத்து இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்றைய தினம் சென்னையிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி அணி அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்து ஆதிக்கத்தை செலுத்தியது. அதேசமயம் மறுபக்கம் இந்திய வீரர்களால் எதிரணியின் டிஃபென்ஸை தாண்டி கோலடிக்க முடியவில்லை.

அதன்பின் இந்திய அணி கோலடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 5-1 என்ற கோல்கள் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், நடப்பு இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணியானது அரையிறுதியில் தோல்வியடைந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பதிவு செய்ததுடன் 1-1 என்ற கணக்கில் போட்டியை சமனிலையில் வைத்திருந்தனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோலை பதிவு செய்து முன்னிலைப் பெற்றது. அதேசமயம் அர்ஜெண்டினா அணியானது 49ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க தவறியது. இதனால் ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இதையடுத்து நாளை மறுநாள் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி பலப்பரீட்சை நாடத்தவுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.