சென்யார் புயல்: இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு
சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 294 பேரும், தாய்லாந்தில் 263 பேரும் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும் இதுவரை 557 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக வலுப்பெற்று கடந்த 26-ம் தேதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடந்தது. இதன்காரணமாக அங்கு கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
குறிப்பாக வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சே மாகாணங்களில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ளனர். 620 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 290 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 3.11 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப பல வாரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் காரணமாக தாய்லாந்து நாட்டின் 14 மாகாணங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அந்த நாட்டில் இதுவரை 263 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் 10 மாகாணங்களில் சென்யார் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அந்த நாட்டில் 21,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்து உள்ளனர். சென்யார் புயலால் இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் மட்டும் 557 பேர் உயிரிழந்துள்ளனர்.