இந்தியாவின் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த நேபாளத்தில் அனுமதி

இந்தியாவின் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த நேபாளத்தில் அனுமதி

இந்தியாவில் அதிக மதிப்புடைய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் இனி செல்லுபடியாகும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நேபாள அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. அதில் சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளிடையே பயணிக்கும் பொதுமக்கள் வசதிக்காக இந்தியாவில் அதிக மதிப்புடைய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஒரு நபர் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி 2015 அந்திய செலாவணி மேலாண்மை விதிகளின்படி, இந்த சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா, நேபாளம், மற்றும் பூடான் நாடுகள் இடையே பயணம் செய்பவர்கள் அதிக மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்கியின் செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பாவ்டேல் பேசுகையில், ”ரூபாய் நோட்டு குறித்து நேபாள அரசாங்கம் அனுமதி அளித்த பின், NRB (nepal rastra bank) இச்சட்டத்தை அமல்படுத்தும். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடர்பாக பயணிப்போர் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறுவர்.

இது இருநாடு மக்களுக்கு இடையே நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. மேலும் நேபாள நாட்டை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு பயணம் செய்கின்றனர். அப்போது இந்த ரூபாய் நோட்டு கட்டுப்பாடுகளால் இந்தியாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மூலம் நேபாளத்திற்கு கொண்டு வரும் சூழல் நிலவியது.

முன்னதாக இந்தியாவின் 500 மற்றும் 1000 நோட்டுகளை பயன்படுத்தியதாக நேபாளத்தில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய ரூபாய் நோட்டு கட்டுப்பாட்டால் நேபாளத்தில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக இந்திய சுற்றுலா பயணிகள் அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த முடியாமல் திணறி வந்தனர். தற்போது அரசு அதிக மதிப்புடைய இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது நேபாள சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.