ஒரே மாவட்டத்தில் 19 வயதுக்குட்பட்ட 400க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பு: அதிர்ச்சி தகவல்!
வேலூரில் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 19 வயதுக்குட்பட்ட 415 பெண்கள் கருத்தரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கான கூராய்வு கூட்டம் நேற்று (அக்.28) வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் விஜயா, உறுப்பினர்கள் கசிமீர் ராஜ், மோனா மட்டில்டா பாஸ்கர், எஸ்பி மயில்வாகனன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய எஸ்பி மயில்வாகனன், “2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை மாவட்டத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட கொடிய குற்றங்களில் ஈடுபட்ட நால்வர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை 60 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படுகிறது.
சிறுவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 159 பேர் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனை (கவுன்சிலிங்) பெறுகின்றனர்” என்றார்.
மேலும், இந்த கூட்டத்தில் குழந்தைத் திருமணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 59 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், குழந்தைத் திருமணத்துடன் தொடர்புடைய 8 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் 19 வயதுக்குட்பட்ட (டீன் ஏஜ்) 415 பெண்கள் கருத்தரித்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மாணவர்களுக்கிடையே ஏற்படும் புகார்களை வெளிப்படுத்துவதற்காக அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி போலவே, தனியார் பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் உடல் அல்லது உளவியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, குழந்தை திருமணம் மற்றும் மாணவர்களின் மனநலம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.