கேரளாவில் சிகிச்சை பெற்றுவந்த கென்யா முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்

கேரளாவில் சிகிச்சை பெற்றுவந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்காவிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்ட காரணத்தால் தனது மகள் ரோஸ்மேரி ஒடிங்கா மற்றும் நெருங்கிய சொந்தங்களுடன் கேரளாவுக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.
ஏற்கெனவே ரோஸ்மேரி ஒடிங்காவிற்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தபோது, கேரளாவில் சிகிச்சை பெற்று அவருடைய கண் பார்வை மீண்டும் திரும்பியது. இதுகுறித்து கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், கென்யா பிரதமர் ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரிக்கு கேரளாவில் சிகிச்சைபெற்று கண் பார்வை திரும்பியது குறித்து பேசியிருந்தார்.
இதனையடுத்து ஒடிங்காவும் தனது உடல்நலக் குறைபாட்டிற்காக சிகிச்சை பெற இங்கு வந்திருந்தார். அவர் கடந்த ஒருவார காலமாக எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஒடிங்கா திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு, ஸ்ரீத்ரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். காலை 9.52 மணியளவில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
இதனையடுத்து தற்போது ஒடிங்காவின் உடல் கூத்தாட்டுக்குளத்தில் உள்ள தேவா மாதா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய உடலை கென்யாவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கென்யா நாட்டைச் சேர்ந்த ரைலா ஒடிங்கா 1945ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிறந்தார். கென்யாவில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான காலகட்டங்களாக கருதப்படுகிற 2008 முதல் 2013 வரை கென்யாவின் பிரதமராக பதவி வகித்தார். அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரானார். நவீன கென்யா ஜனநாயகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் ஒடிங்கா.
1997, 2007, 2013, 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் கென்யாவின் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் போட்டிட்ட ஒடிங்கா, 5 முறையும் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் உடல்நல குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ஒடிங்கா, கேரளாவிற்கு சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில் அங்கு உயிரிழந்தார்.