இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு - புதுக்கோட்டையில் சீறிப்பாய்ந்த காளைகள்
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அதிக வாடிவாசல்களை கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டி, மற்றும் குதிரை வண்டி பந்தயம் என அதிகமாக நடைபெறுவது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். அந்த வகையில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கும்.
அதன்படி இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வகோட்டை தாலுகா, தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று களம் கண்டு வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் அருணா, மாடுபிடி வீரர்களை உறுதிமொழி ஏற்க வைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முதன்முதலாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வருகின்றனர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடின. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.