மெரினாவில் 300 கடைகள் ஒதுக்கப்படுவதை கண்காணிக்க குழு - உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் 300 கடைகள் ஒதுக்கப்படுவதை கண்காணிக்க குழு - உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் 300 கடைகளை யார் யாருக்கு ஒதுக்குவது என்பதை கண்கானிக்க உயர் நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமார் தலைமையில் கண்கானிப்பு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தனக்கும் ஒரு கடை ஒதுக்கக்கோரி தேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினாவில் எந்த பகுதியில் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்குவது? என்பது தொடர்பாக மாநகரட்சி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நீலக்கொடி பகுதியாக அறிவிக்கப்பட்ட 3 பகுதிகளுடன், நினைவிடத்துக்கு பின் உள்ள 35 ஏக்கர் இடத்தையும் சேர்த்து, அழகுபடுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதிதாக கடைகளுக்கு அனுமதி வழங்கும் போது அதிகப்படியான கடைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்டனர்.

அத்துடன், மெரினாவில் உள்ள 1,417 கடைகளை அகற்றிவிட்டு குறிப்பிட்ட உணவகங்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யும் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற பொருட்களுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடைகள் அமைப்பது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவினர், எந்த பகுதியில் கடைகள் அமைப்பது, யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இதற்கு உயர் நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமார் (5 லட்சம் ரூபாய் ஊதியம்) தலைமையில், ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மோகன் ராஜ் (2 லட்சம் ரூபாய் ஊதியம்), நீதிமன்ற பதிவாளர் ரங்கநாதன் (ஓய்வு) (2 லட்சம் ரூபாய் ஊதியம்) அடங்கிய கண்கானிப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

அத்துடன், கடைகளை ஒதுக்குவதற்கான, குலுக்கல் நடைபெறும் நேரம், தேதி மற்றும் இடத்தை ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்கானிப்பு குழுவால் அறிவிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்க வேண்டும். கடைகள் தேர்வுக்கான குலுக்கல் பணி முடிந்ததும், கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கையை கண்காணிப்பு குழுவுடன் இணைந்து மாநகராட்சி உடனடியாக எடுக்க வேண்டும். அனைத்து பணிகளும் முடிந்ததும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 4ம் தேதி ஒத்திவைத்தனர்.