மரண தண்டனைகளை நிறுத்திய ஈரான்!. மனமாறி பாராட்டிய டிரம்ப்!
ஈரானில் 800-க்கும் மேற்பட்டோரின் தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்நாட்டு நிர்வாகத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த முடிவுக்கு “மிகுந்த மரியாதை” தெரிவிப்பதாக கூறினார். இந்த முடிவு “பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக, ஈரானின் கடுமையான அடக்குமுறை தொடர்ந்தால் அமெரிக்க ராணுவ தலையீடு ஏற்படக்கூடும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அவரது இந்த பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரான் 800-க்கும் மேற்பட்டோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற திட்டமிட்டிருந்ததாகவும், அதனை கடைசி நேரத்தில் ரத்து செய்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார். “நேற்று 800-க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட திட்டமிட்டனர். ஆனால் அதை அவர்கள் ரத்து செய்துள்ளனர். அந்த முடிவை நான் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறேன்,” என்று கூறினார்.
இதற்குப் பின்னர், தனது சமூக ஊடக தளத்தில் டிரம்ப், “நன்றி! என்ற ஒரு வார்த்தையுடன் பதிவிட்டார். முன்னதாக, “உதவி வழியில் உள்ளது” என்று கூறிய டிரம்பின் கருத்து இன்னும் பொருந்துமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நாம் பார்க்கலாம்” என்று மட்டுமே அவர் பதிலளித்தார். அரபு நாடுகள் அல்லது இஸ்ரேல் அதிகாரிகள் தன்னை பாதித்தார்களா என்ற கேள்விக்கு, “யாரும் என்னை சமாதானப்படுத்தவில்லை. நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், ஈரான் தூக்குத் தண்டனைகளை ரத்து செய்தது குறித்து அவர் எந்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் உறுதி செய்தார் என்பது குறித்து டிரம்ப் தெளிவுபடுத்தவில்லை. இதனால், அவரது கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள தகவல் ஆதாரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.