’பராசக்தி’ பார்த்து இளைஞர்கள் இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் - ரசிகர்கள் கருத்து
பராசக்தி படம் பார்த்து தற்போதைய தலைமுறையினர் இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் 1960களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு பராசக்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை விடுமுறை முன்னிட்டு நேற்று (ஜன.10) தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
கரூர் எல்லோரா, அஜந்தா திரையரங்கில் பராசக்தி திரைப்படம் பார்த்த ரசிகர்கள், "பராசக்தி படம் உணவுப்பூர்வமான மொழி அரசியலைப் பேசும் படமாக உள்ளது. 1960 காலகட்டத்தை தத்ரூபமாக படமாக்கியுள்ளனர். இன்றைய தலைமுறையினர் அனைவரும் இந்த படத்தை பார்த்து நமது முன்னோர்களின் கஷ்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும்" என்றனர்.
தமிழ் மொழியை காக்க திராவிட கட்சிகள் எதிர்கொண்ட கஷ்டங்களை ஒரு அற்புதமான படைப்பாக பராசக்தி படத்தை உருவாக்கியுள்ளனர் என படம் பார்த்த மற்றொரு ரசிகர் தெரிவித்தார். அடுத்து வரும் தலைமுறையினரும் இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். இளைஞர்கள் முதல் அனைவரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். இப்படத்தை பார்த்தால் தமிழ்ப்பற்று பீறிட்டு வருகிறது எனவும் ரசிகர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக பேசினார்.
’அமரன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியானது முதல் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் ரத்னமாலா உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் டிரெய்லரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால், பராசக்தி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் படம் வெளியாவதில் இழுபறி நீடித்து வந்தது.
படத்தில் 25 காட்சிகளுக்கு சென்சார் போர்டு கட் வழங்கிய நிலையில், இப்படத்திற்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திரையரங்குகளில் வெளியான பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.