மூத்த இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்
சுமார் 60 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த தர்மேந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 89.
பாலிவுட் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பிரபல நடிகராக கோலோச்சியவர் தர்மேந்திரா (89). இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் அவர் வீடு திரும்பிய நிலையில் இன்று (நவ.24) காலமானார்.
சில வாரங்களுக்கு முன் அதாவது நவம்பர் 10 ஆம் தேதி தர்மேந்திராவுக்கு செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இருப்பினும் அவரது உடல்நலம் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மனைவி ஹேமாமாலினி, மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மகள் ஈஷா தியோல் ஆகியோர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தர்மேந்திரா இன்று காலமானதாக ஐ.ஏ.என்.எஸ். நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து மும்பையில் அவரது உடல் தகனம் செய்யப்படும் வைல் பார்லே மயானத்துக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இன்று வருகை தந்தனர். தொடர்ந்து பாலிவுட் திரைப்பிரபலங்களும் அவரது மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பயணம்
கடந்த 60 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் கோலோச்சி இருந் தர்மேந்திரா, தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருந்தார். 1935ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த இவருக்கு இவரது பெற்றோர் தரம்சிங் தியோல் என பெயர் சூட்டினர். 1960 ஆம் ஆண்டு ’தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற படத்தில் அறிமுகமானார். ஆக்ஷன், காதல், நகைச்சுவை என அனைத்து வகையான படங்களிலும் தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசப்படுத்தியவர்.
காதல் படங்களான ’ஆயே தின் பஹார் கே’ மற்றும் ’ஆயி மிலன் கி பேலா’ போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்கள். ஆக்ஷன் படமான ‘பூல் அவுர் பத்தர்’ அவரது அசுர ஸ்டண்ட் திறனை பறைசாற்றியது. 1970 முதல் 1980இல் வெளியான ’ஷோலே’, ’சீதா அவுர் கீதா’, ’ராஜா ஜானி’, ’சுப்கே சுப்கே’, ’பிரதிக்யா’, ’ஜுக்னு’ மற்றும் ’தரம் வீர்’ போன்ற படங்கள் அவரை காதல் கதாநாயகானாக ரசிகர்கள் மனதில் பதிய செய்தது.
தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவுக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. இவர் 2012இல் பத்ம பூஷண் விருது பெற்றார். 'அப்னே’, ’யம்லா பக்லா தீவானா’, ’லைஃப் இன் எ… மெட்ரோ’, ’ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’, மற்றும் ’தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா (2024)’ போன்ற படங்களில் 2கே கிட்ஸ்களின் மிக விருப்பான கதாபாத்திரமாகவும் வலம் வந்தார். அவர் கடைசியாக ஸ்ரீராம் ராகவன் இயக்கி வந்த 'பரம் வீர் சக்ரா' விருது பெற்ற அருண் கேதர்பாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வந்தார். இந்த படம் டிசம்பர் 2025 வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.