கிளைமாக்ஸ் காட்சிகளில் AI வேண்டாம் - இயக்குநர் செல்வராகவன் பேச்சு!
கிளைமாக்ஸ் காட்சிகளில் AI வேண்டாம் என ஆர்யன் திரைப்பட நிகழ்ச்சியில் இயக்குநர் செல்வராகவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியான ஆர்யன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், "என் மகன் பெயர் ஆர்யன். எனது தயாரிப்பில் இதுவரை எடுத்த 3 படங்களும் வெற்றி தான். என் மகன் சிறுவனாக இருக்கிறான். ஆனாலும் அவனுக்கும் இந்த கிரைம் திரில்லர் படம் மிகவும் பிடித்து இருந்தது. இந்த கதையை 2020 ஆம் ஆண்டில் இயக்குநர் கூறினார். இன்று முதல் புதிய கிளைமாக்ஸ் திரையிடப்படுகிறது. நான் தனித்துவமான, வித்தியாசமான படங்கள் பண்ணும் போது எனக்கு எல்லாமே வெற்றி தான். என்னுடைய கேரியரில் மற்ற படங்களை விட ஆர்யன் திரைப்படத்திற்கு தான் நல்ல ஓபனிங் கிடைத்தது.
நான் தனித்துவமான படங்களில் நடிக்கவில்லை என்றால் எப்பொழுதோ காணாமல் போய் இருப்பேன். நான் ராட்சசன் படத்திற்காக நிறைய சைக்கோ பற்றி படித்தேன். சினிமாவில் காட்டுவது போல் அவர்கள் இருக்க மாட்டார்கள். எல்லோரையும் போல தான் சகஜமாக பழகுவார்கள். கிளைமாக்ஸ் காட்சி மாற்றுவதற்கான காரணம், இப்போ ராட்சசனில் வில்லனை ரொம்ப நியாயம் பண்ணினால் சைக்கோ பண்ணது நியாயம் ஆகி விடும். அதே மாதிரி தான் இந்த படத்திற்கும் ஆக கூடாது என்று கவனத்தில் எடுத்துக் கொண்டோம். அதனால் சொல்ல வேண்டிய கருத்தை வேறு விதமாக சொல்லி இருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் என்னுடைய படங்களை தனித்துவமாக தான் தேர்வு செய்வேன். அதே போல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அது தான் என்னுடைய வெற்றிக்கான காரணம் "என பேசினார்.
அதனைத் தொடந்து இயக்குநர் செல்வராகவன் பேசிய போது, "யாருமே இல்லாமல் எடுத்த படம் தான் துள்ளுவதோ இளமை. அப்போ இருந்து இப்போது வரை எனக்கு துணை நின்று வரும் அனைவருக்கும் நன்றி. அந்த படம் இல்லை என்றால் தனுஷும் இல்லை நானும் இல்லை" என பேசினார்.
மேலும், 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, "திரைப்படத்தில் அனிதா கதாபாத்திரம் இல்லை.... ஆனால் இருக்கிறார்கள்" என்றார்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகமும் புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, "ஆயிரத்தில் ஒருவன் 2 பாகம் குறித்து கார்த்தியிடம் பேசி இருக்கிறேன். படம் வரும் நம்புங்கள், புதுப்பேட்டையும் வரும்" என்று செல்வராகவன் தெரிவித்தார்.
AI மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்படுகிறது. உதாரணமாக காஞ்சனா திரைப்படம், உங்களுடைய 7ஜி ரெயின்போ காலனி, பருத்தி வீரன் போன்றவற்றின் கிளைமாக்ஸ்களை மாற்றி வெளியிடுகிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ற கேள்விக்கு பதில் அளித்த செல்வராகவன், "ஒரு படைப்பாளியின் படைப்பை அப்படியே விட்டு விட வேண்டியது தான். அதனை மாற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இது இங்கு மட்டுமல்ல ஹாலிவுட் கூட நடக்கிறது. ஏ ஐ வேண்டாம்"என்று அவர் தெரிவித்தார்.