சிவகார்த்திகேயன் குஷி.. பராசக்தி ரிலீஸ் உறுதியாகிறது.. நடந்தது என்ன?

சிவகார்த்திகேயன் குஷி.. பராசக்தி ரிலீஸ் உறுதியாகிறது.. நடந்தது என்ன?

பராசக்தி படத்திற்கு ஒருவழியாக மத்திய தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.  படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், பொங்கல் வெளியீட்டில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரிவைசிங் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. படத்தின் கதைக்களம் 1960களில் மெட்ராஸில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஒருமைப்பாட்டை, தணிக்கைக் குழு கோரியுள்ள வெட்டுக்கள் பாதிக்கும் என சுதா கொங்கரா வாதிடுகிறார்.

படத்தின் அடிப்படைக் கருவையே இவை சிதைத்துவிடும் என்பது அவரது நிலைப்பாடு. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) மொத்தம் 15 கூடுதல் வெட்டுக்களைக் கோரியது. இந்த மாற்றங்களை இயக்குநர் மறுத்ததால், 'பராசக்தி' வெளியீடு இரண்டு முதல் மூன்று வாரங்கள் தாமதமாகலாம் என்று கூறப்பட்டது.

 முன்னதாக தணிக்கைச் சான்றிதழ் குறித்த நிச்சயமற்ற நிலை நிலவினாலும், படக்குழுவினர் விளம்பரப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் புதன்கிழமை கேரளாவில் ஒரு கல்லூரி நிகழ்வில் பங்கேற்று படத்தைப் பிரபலப்படுத்தினர்.

1960களில் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை வடிவமைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களே 'பராசக்தி' படத்தின் கதைக்களத்தின் ஆணிவேராகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) அடிப்படைக் கொள்கையுடன் தொடர்புடைய இந்த உள்ளடக்கம், வெளியீட்டுச் சூழலுக்கு அரசியல் முக்கியத்துவம் சேர்க்கிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 'பராசக்தி', 1960களின் மெட்ராஸ் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலியான உயிர்களைச் சித்தரிக்கிறது.

இயக்குநர் சுதா கொங்கரா பிரசாத் இயக்கிய இந்தப் படம், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் 100வது படைப்பாகும். 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்திற்கு  16+ வயது கொண்டவர்கள் படம் பார்க்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.