நியூயார்க் மேயரான முதல் ஆசிய - அமெரிக்க முஸ்லிம் மம்தானி! டிரம்ப்புக்கு சவாலாக விளங்குவாரா?
அமெரிக்காவின் நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய - அமெரிக்க முஸ்லிம் ஒருவர் அமெரிக்காவில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமாகவும், உலகளவில் பெரிய பங்கு சந்தைகள் இயங்குகிற முக்கிய இடமாகவும் விளங்குகிறது நியூயார்க். இந்த நகரில் சுமார் 125 பில்லியனர்கள் வசித்து வருகின்றனர். உலக பொருளாதாரத்தின் முக்கிய தலமாக பார்க்கப்படுகிற நியூயார்க் நகரின் தேர்தல்கள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மேயர் தேர்தலானது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, குடியரசு கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஸோஹ்ரான் மம்தானி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 34 வயதான மம்தானி மற்ற இருவரையும் தோற்கடித்து நியூயார்க் நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் முதல் முஸ்லிம் மேயர், தெற்காசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் போன்ற சிறப்புகளை பெற்றுள்ளார். மேலும் 1892 ஆம் ஆண்டுக்கு பிறகு, நியூயார்க்கின் மிக இளம் வயது மேயரும் இவரே. வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மேயர் பதவியை ஏற்கிறார் மம்தானி.
அமெரிக்காவில் மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் நியூயார்க்கில் அன்றாட செலவீனங்கள் மிகவும் அதிகம். இங்கு வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவு போன்ற அனைத்துமே சாமானியர்களுக்கு உகந்ததாக இல்லை என்பதை மறுக்கமுடியாது. இதுபோன்ற பிரச்சினைகளை மம்தானி கையில் எடுத்ததுடன், நியூயார்க் நகரத்தை மலிவானதாகவும், சாமானியர்களும் வாழக் கூடிய வகையில் மாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார். குறிப்பாக, வாடகைகள் குறைப்பு, இலவச பேருந்து, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பராமரிப்பு போன்றவை மம்தானியின் வாக்குறுதிகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு தேர்தலில் 2 மில்லியனுக்கும் அதிகமான நியூயார்க் மக்கள் வாக்களித்தனர். கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் இதுதான் உச்சபட்சம் என நகர தேர்தல் வாரியம் தெரிவித்திருக்கிறது.
யார் இந்த ஸோஹ்ரான் மம்தானி?
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மீரா நாயர் மற்றும் கல்வியாளர் மஹ்முத் மம்தானி ஆகியோரின் மகன் ஸோஹ்ரான் மம்தானி. இவர் உகாண்டாவில் பிறந்தவர். மம்தானி 7 வயதாக இருந்த போது இவருடைய குடும்பம் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தது. இவருக்கு 2018-ல் தான் அமெரிக்க குடியுரிமை கிடைத்தது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட தேசிய குடியரசு கட்சியினர்கள் பலரின் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளானார் மம்தானி. மேலும் இவர் வெற்றி பெற்றால் நியூயார்க் நகருக்கான அரசாங்க நிதி நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் மம்தானியின் மகத்தான வெற்றி, இடதுசாரி ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.