‘அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டும் தப்பித்தேன்’ - பயங்கரமான இரவை நினைவுகூர்ந்த பெண்
மும்பை தாக்குதலின்போது அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டபோதும், தப்பித்த மும்பை பெண் அந்த பயங்கரமான இரவை நினைவு கூர்ந்துள்ளார்.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு இரவில் படகில் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்து நேற்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த மும்பை பெண் தேவிகா, இரவில் நேர்ந்த சம்பவம் குறித்து கூறியதாவது: அந்த பயங்கரமான இரவை மறக்கவே முடியாது. இன்று நினைத்தாலும் கூட உடல் நடுங்குகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். என் கண் முன்னால் ஏராளமான மக்கள் உயிரிழந்த காட்சி கண்ணை விட்டு அகலவில்லை.
அஜ்மல் கசாப்தான் என்னைச் சுட்டார். அதிலிருந்து நான் தப்பித்தேன். அஜ்மல் கசாப் யார் என்று அடையாளம் காட்டுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தில் அவரை நான் அடையாளம் காட்டினேன். அப்போது, சிலர் என்னை தவறாக வழிநடத்த பல முறை முயன்றனர். சிலர் என்னை குழப்ப முயன்றனர். நீதிமன்றத்தில் அஜ்மல் கசாப் உட்பட 3 பேர் என் முன்னால் நிற்க வைக்கப்பட்டனர். ஆனால் நான் குழப்பம் அடையவில்லை.
இவர்தான் சுட்டார் என்று தெளிவாக கசாப்பை அடையாளம் காட்டினேன். தாக்குதலின்போது அஜ்மல் கசாப் முகத்தில் எந்த பயமும் இல்லை. எங்களைக் கொல்வது அவருக்கு மகிழ்ச்சி தந்தது போல் அவரது முகபாவம் இருந்தது. துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பித்த பின்னர் அரசு எனக்கு பல்வேறு வாக்குறுதிகளையும், நம்பிக்கையையும் அளித்தது. ஆனால் அதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் மறந்துவிட்டன.
பின்னர் அரசு தந்த உறுதிப்படி நீதிமன்றம் மூலம் எனக்கு வீடு கிடைத்தது. இதற்கு வழக்கறிஞர்கள் உஷா பென்ஸ், குனிகா லால் ஆகியோருக்கு நன்றி. இந்த வழக்கு தொடர்பாக பலர் என்னை ஊடகங்களில் இருந்து அணுகும்போது இந்த வீட்டில் இருந்துதான் பேட்டி கொடுக்கிறேன்.
பல வாக்குறுதிகளை அரசு மறந்துவிட்டது. அந்த வாக்குறுதிகள் மீதுதான் இன்னும் அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் 17 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு நேர்ந்த பயம் இன்றும் இருக்கிறது. இவ்வாறு தேவிகா தெரிவித்தார்.