மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும் - உயர் நீதிமன்றம் கருத்து

மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும் - உயர் நீதிமன்றம் கருத்து

மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற, மலைப்பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி கோரி லோகநாதன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது எட்டு வாரங்களில் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உதகை நகராட்சி ஆணையர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 150 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டடமும் கட்டக்கூடாது என விதிமுறை உள்ளது. அதனால், 17 மீட்டர் தூரத்திற்குள் வரும் இப்பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உதகை நகராட்சி ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட விதிகளுக்கு முரணாக கட்டடம் கட்ட தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விதிகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், அதிகாரிகள் கவனமுடன் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, மலைப்பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும் என தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக உள்ள சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மலைப்பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.