''2 நாள் சுற்றுப்பயணம்'' - மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக இன்றிரவு மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் எஸ்ஆர்எம்யூ உறுப்பினர்கள் சால்வை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி மற்றும் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இங்கிருந்து காரில் புறப்பட்டு கோவில்பட்டி சென்று அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலையை திறந்து வைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் முக்கூடல் சென்று இரவு தங்குகிறார்.
நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்று, அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை துவக்கி வைத்து விட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு அனந்தபுரம் சென்று அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு அமர் சேவா சங்கம் சென்று அங்கு பார்வையிட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் தென்காசி விருந்தினர் மாளிகை சென்று தங்குகிறார். பின்னர் நாளை மாலை மதுரை வந்து அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை மறுநாள் காலை அங்கிருந்து 8 மணிக்கு கோரிபாளையம் சென்று அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று அங்கு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதன் பிறகு அங்கிருந்து கிளம்பி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் சென்று அங்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்து மதியம் ஒரு மணியளவில் சென்னை செல்கிறார். முதலமைச்சர் வருகையை ஒட்டி திருநெல்வேலி, தென்காசி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.