‘நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டி’ - நயினார் நாகேந்திரன் சூசகம்
"என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பாஜகவின் பட்டியலில் இடம்பெறும்" என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதன்மூலம் திருநெல்வேலி தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுவதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி தச்சநல்லூரில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய உயர்மின் கோபுரத்தை திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தேமுதிக தனது நிலைப்பாட்டை வரும் 3-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இரட்டை இன்ஜின் சர்க்கார் என்றால், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுவதுதான். அதையே டபுள் இன்ஜின் சர்க்கார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தமிழகத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சாலைகள், பாலங்கள், ரயில்வே விமான நிலையங்கள் போன்றவை அமைப்பதற்கும் ரூ.14 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு எதையும் தரவில்லை என்று திமுக கூறி வருகிறது.
கடந்த 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021-ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். திருநெல்வேலி தொகுதி மக்கள் எனது உடன்பிறந்த சகோதரர்களை போன்றவர்கள். என்னை அவர்களின் வீட்டில் ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள். எப்போதும் என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பாஜகவின் பட்டியலில் இடம்பெறும்.
பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களிலோ, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிலோ பாஜகவின் சித்தாந்தத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. எதை வைத்து முதல்வர் இப்படி சொல்லிவருகிறார் என்பது புரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நல்லவர்கள் இடம்பெறுவார்கள் நாட்டு மக்கள் நல்ல பயனடைவார்கள். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.
“யார் யாரெல்லாம் நல்லவர்கள் என்பது அடுத்தடுத்து தெரியவரும்” என சசிகலா கூட்டணியில் இணைவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.