திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உத்தரவு

திண்டுக்கல்லில் சாலை விரிவாக்கத்துக்காக நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதமானதையடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களது கடைகள் அமைந்திருந்த இடத்தை 2017-ம் ஆண்டு கையகப்படுத்தியதற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில் குறைக்கப்பட்ட தொகையை வழங்கக் கோரி 2019-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 2021-ம் ஆண்டு ரூ.4 கோடியே 37 லட்சத்து 42 ஆயிரத்து 783 இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குறைக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை 8 வாரங்களுக்குள்ளாக வழங்கி, உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்து கணேசபாண்டியன் ஆஜரானார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஜூலை 28, ஆக. 26, செப். 1, அக்.7 ஆகிய தினங்களில் 4 முறை வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அரசு தரப்பில் உத்தரவை நிறைவேற்றவோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கை தாக்கல் செய்யவோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனவே, தமிழக அரசு இந்த உத்தரவின் நகலை பெற்ற தினத்தில் இருந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை தொகையையும் திண்டுக்கல் நிலம் கையகப்படுத்துதல் மறுசீரமைப்பு வழக்கை விசாரிக்கும் முதன்மை மாவட்ட நீதிபதியின் கோப்பில் உள்ள இந்த வழக்குகளின் நன்மைக்காக வைப்புத்தொகையாக நீதிமன்றக் கணக்கில் செலுத்த உத்தரவிடப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்’’ என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த உத்தரவின் நகலை டாஸ்மாக்கின் மேலாண் இயக்குநர் மற்றும் திண்டுக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்ப நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தினர்.