மழையில் மக்களோடு நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு உதயநிதி அட்வைஸ்

மழையில் மக்களோடு நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு உதயநிதி அட்வைஸ்

பருவமழையின் போது மக்களோடு மக்களாக நின்றோம் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.22), சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தாமோ அன்பரசன், ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது, பருவமழை காலத்தில் திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “வடக்கிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கிறது. அதுமட்டுமின்றி, இன்னும் 2 நாட்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த முறையை விட, இந்த முறை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழல் வந்தால், நாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால், நாம் ‘மக்களிடம் செல், மக்களிடம் பழகு, மக்களிடம் பேசு, மக்களுக்கு சேவை செய்’ என்று அறிஞர் அண்ணா சொல்லிக் கொடுத்த வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மழை பெய்த பல இடங்களுக்கு சென்றேன். தொடர் மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கொஞ்ச நேரம் வெயில் அடித்தால் அந்த நீர் வடிந்துவிடும். மழைநீர் தேங்கும் போது, மக்கள் உங்களை அழைத்து, இங்கு வந்து பாருங்கள் எனக் கூற நேரிடலாம். அப்படி ஏதேனும் அழைப்பு வந்தால், அங்கு சென்று மக்களுக்கு உதவுங்கள்.

அப்படி அழைத்தால், மக்களுக்கு உதவி வேண்டும் என்று அர்த்தம். யாரும் கோபத்தை காட்ட உங்களை கூப்பிட மாட்டார்கள். முதலமைச்சர், அமைச்சர்களின் கவனத்துக்கு சென்றால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில், இந்த மழையில் மக்களோடு மக்களாக நாம் நின்றோம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்” என உதயநிதி கேட்டுக் கொண்டார்.