மெட்ரோ திட்ட அனுமதிக்காக பிரதமரை நேரில் சந்திக்க தயார் - முதல்வர் ஸ்டாலின்

மெட்ரோ திட்ட அனுமதிக்காக பிரதமரை நேரில் சந்திக்க தயார் - முதல்வர் ஸ்டாலின்
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, விரிவாக விளக்கம் அளிக்க பிரதமரை நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது ஏமாற்றத்தையும், வேதனையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மேற்கோள் காட்டிய காரணங்கள் பொருத்தமற்றவை என்று குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர்,மெட்ரோ ரயில் கொள்கை 2017-ல் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, கோவை உள்ளூர் திட்டப் பகுதியின் மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டிலேயே 20 லட்சத்தை தாண்டியதாக கூறியுள்ளார். மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 20 லட்சம் என்ற அளவுக்கோல் ஒரே மாதிரியாகக் கருத்தில் கொள்ளப்பட்டு இருந்தால், ஆக்ரா, இந்தூர், பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறி இருக்க வாய்ப்பில்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த அளவுக்கோலை கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு சுட்டிக்காட்டுவது மத்திய அரசின் பாகுபாட்டு நிலையை காட்டுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை, மதுரையில் முன்மொழியப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது ஒரு தடையாக இருக்காது என்றும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனவே, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துருவைத் திருப்பி அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேவைப்பட்டால், இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க டெல்லியில் பிரதமரை சந்திக்க தயாராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.