ஜவுளி நிறுவனங்கள் இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 சதவீத மூலதன முதலீட்டு மானியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
‘அதிநவீன நெசவு, பின்னலாடை இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கோவை கொடிசியாவில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான முதலாவது ஜவுளித்தொழில் மாநாட்டை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது: கோவை, திருப்பூர், கரூர், சேலம், ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்கள், நாட்டின் ஜவுளித்துறை மையமாக விளங்குகின்றன.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் இன்றைக்கு வளர்ந்து வருகின்றன. 30 லட்சம் பேருக்கு ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நாடு முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
ஜவுளித்துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும். 6 சதவீத மானியத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து உயர்த்தும். இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்தி பேசியதாவது: இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோமொபைல், ஐடி, காலணி உற்பத்தி, மின்னணு பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 33 சதவீதம். நேரடியாக 31 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டின் ஜவுளித்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதில் 60.12 சதவீதம் பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
ஜவுளித் தொழிலுக்கான கண்காட்சி, வாங்குவோர் விற்போர் சந்திப்பு, கருத்தரங்குகள், விருதுநகரில் அமைய உள்ள பி.எம்.மித்ரா ரோட் ஷோ, கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜவுளித்தொழிலுக்கு மட்டும் ரூ.9,764 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் ரூ.912.97 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக்கொள்கை 2025-26 இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கை ஏற்று, ஜவுளி நிறுவனங்களுக்கு அதிநவீன நெசவு, பின்னலாடை இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.30 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ரூ.912.97 கோடி மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கைத்தறி மற்றும் துணிநூல் துறையுடன் கையெழுத்தாகின. இதன்மூலம் 13,080 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதிக்காக முதலிடம் பெற்ற 5 நிறுவனங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை, தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-ல் அறிவிக்கப்பட்டபடி, 15 ஆண்டுகால பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த ரூ.11.70 லட்சம் வட்டி மானியம், விசைத்தறிகளை நவீனப்படுத்த விசைத்தறியாளர்களுக்கு ரூ.67.49 லட்சம் மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான ஆணையை துணை முதல்வர் வழங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, செந்தில் பாலாஜி எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், கைத்தறி, துணிநூல் கதர் துறை செயலர் வே.அமுதவல்லி, துணிநூல் துறை ஆணையர் இரா.லலிதா, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஏஇபிசி தேசிய தலைவர் ஆ.சக்திவேல், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் துரை பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.