காவல்துறை பணி செய்ய விடாமல் தடுத்தாக தவெக பொதுசெயலாளர் என்.ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சியில் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி திருச்சிக்கு சென்றிருந்தார். திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் அவர் மனுக்களை வைத்து வழிபாடு நடத்தினார். அப்போது அங்கே ஏராளமான த.வெ.க தொண்டர்கள் திரண்டதால், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததால், அவற்றை அப்புறப்படுத்துமாறு காவல்துறையினர் கோரியும், தொண்டர்கள் அதற்கு மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சட்டவிரோதமாகக் கூடுதல், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மீது திருச்சி விமான நிலையக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, என்.ஆனந்த் தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது என்.ஆனந்த் தரப்பில், காவல்துறை உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, என்.ஆனந்த் மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.