அரசு கல்லூரியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
நந்தனம் அரசு கலை கல்லூரியில் பெண் பணியாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கேன்டீன் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் சென்னையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், தனது நண்பர் உதவியுடன் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் உதவியாளராக கடந்த 20 நாட்களுக்கு முன் பணிக்கு சேர்ந்து உள்ளார்.
இந்த நிலையில், அந்த கேன்டீனை நடத்தி வரும் முத்து செல்வம், சமையல் மாஸ்டர், கேன்டீன் பணியாளர் ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் அழுது கொண்டே சென்று அந்த கல்லூரி காவலாளிகளில் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்தக் காவலாளியின் உதவியுடன் பாதிக்கப்பட்ட இளம்பெண் சமூக நல அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமூக நலத் துறை அதிகாரிகள் சென்னை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அரசு கலைக் கல்லூரி கேன்டீன் உரிமையாளர் முத்து செல்வம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் குணசேகரன் (56), கேன்டீன் பணியாளர் கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அதன் பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட இளம்பெண் சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட மூவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிடம் இது குறித்து கூடுதல் தகவல்களை கேட்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட முத்து செல்வன் கடந்த 12 ஆண்டுகளாக நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கேன்டீனை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் முத்து செல்வம், குணசேகரன், கார்த்திகேயன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் பிரபலமான நந்தனம் அரசு கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்திய மாணவர் சங்க அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கைதானவர்களுக்கு கடும் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.