இசை பல்கலைக்கழகத்தில் பிரபல பின்னணி பாடகிக்கு தேடி வந்த பொறுப்பு!

இசை பல்கலைக்கழகத்தில் பிரபல பின்னணி பாடகிக்கு தேடி வந்த பொறுப்பு!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம், பின்னர் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பல்கலைக் கழகம் குரலிசை, நாதஸ்வரம், வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம் மற்றும் காட்சிவழி தகவல் தொடர்பு வடிவமைப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

இந்த நிலையில், இப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. இந்நிலையில், மூத்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய ஆட்சிமன்றக் குழுவில் இடம் பெற்றுள்ளது குறித்து, மாலதி லக்ஷ்மம் மகிழ்ச்சியும், பெருமிதமும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக தன்னை நியமித்ததற்காக மாலதி லக்ஷ்மன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

பின்னர் நியமனம் குறித்து பேசிய அவர், "அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம், எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத்துறைக்கு வலுவூட்ட என்னால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் வழங்குவேன். அதோடு அனைவரின் ஒத்துழைப்போடு இசை மற்றும் இதர கலைகளை கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பேன்" என்று தெரிவித்தார்.